அரசியலில் மாற்றம் ஏற்படுமா?

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுவதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையில் ஊழல், மோசடிகள் அற்ற அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக அக்கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் ஆலோசனை செய்துவருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு புதிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கி புதிய பிரதமராக வேறு ஒருவரை பதவியமர்த்த ஊழல் குற்றச்சாட்டுகள் அற்ற சில அரசியல் தலைவர்களை சுதந்திரக்கட்சி பரிந்துரை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று மறுபக்கம், ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளூராட்சி சபையில் அதிக வெற்றிகள் கிடைக்குமாயின், ஐக்கிய தேசிய கட்சி மட்டும் தனித்த அரசாங்கம் ஒன்றினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த இரு கட்சிகளையும் தவிர்த்து ஆட்சிக்கு எதிராக செயற்பட்டுவரும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியின் மஹிந்த ஆதரவாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்வாறு பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துகள் வெளிவரும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி இணைந்த அரசாங்கம் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.