தேர்தல் வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை கைதுசெய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற போது நீதிபதி இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

மேலும் தேர்தல் காலம் என்பதனால், பாரிய குற்றச்செயல்களான கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், போதைவஸ்து விற்பனையாளர்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் போன்றோருக்கு பிணை வழங்க முடியாது என இன்றைய நீதிமன்ற வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் ஜனநாயக ரீதியான வன்முறைகளற்ற தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களும் தமது பங்களிப்பினைச் செலுத்தும் முகமாகவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பிணைகள் ரத்துச் செய்யப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.