மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய உழவர் திருநாள்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய உழவர் பொங்கல் திருநாள் இடம்பெற்றது.

மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆனைப்பந்தி ஸ்ரீவிக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய கலாசார பவனியுடன் ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சூரிய பகவானுக்கு பூசை இடம்பெற்று உழவர் பாடலுடன் உரலில் நெல் குற்றி, 15 பொங்கல் பானை ஏற்றி 15 வகையான பொங்கல் இடம்பெற்றது.

இதன்போது 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வருகைதந்திருந்த பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களால் பொங்கல் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், வின்சென்ட் தேசிய பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

பாரம்பரியமான பாடல்கள் இசைக்கப்பட்டு, பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, கிட்டிப் பொல் போன்ற பல்வேறு விளையாட்டுக்களும் நடைபெற்று, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சீவரத்தினத்தின் சிறப்புரை நடைபெற்று பொங்கல் பூசையை அடுத்து பொங்கல் விழா நிறைவு பெற்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like