ஊடகவியலாளருக்கு பார்சலில் வந்த போதைப்பொருள்: நடந்தது என்ன?

ஸ்பெய்ன் நாட்டிலிருந்து ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஹஷீஸ் எனும் போதைபொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

நேற்று பிற்பகல் கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் இந்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்தன தெரிவித்தார்.

குறித்த போதைபொருள் கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஊடகவியலாளருக்கு ஸ்பெய்ன் நாட்டிலுள்ள நண்பர் ஒருவரால் அனுப்பட்டிந்த நீர்ச்சறுக்கு பலகை (Sketeboard) மற்றும் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களுக்குள் இந்த ஹஷீஸ் எனும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 14 இலட்சம் பெறுமதியான ஒரு கிலோ 400 கிராம் ஹஷீஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொள்ள குறித்த ஊடகவியலாளர் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.