தாலிக்கொடியாக மாறிய அரைஞாண் கொடி!

அரைஞாண் கொடிகளை தாலிக்கொடிகள் என நூதனமாக ஏமாற்றி அடகுவைத்துப் பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் பதிவாகியுள்ளது.

தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள மூன்று நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடிகள் பல நாட்களாகியும் மீளவும் மீட்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து குறித்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அடகு வைத்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதன்போது, குறித்த நபரின் பெயரில் தாலிக் கொடிகள் அடகு வைக்கப்பட்டிருந்தனவா? அந்த நபர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

உயிரிழந்தவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தியே இந்தத் தாலிக் கொடிகள் அடகு வைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.இதேவேளை, அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடிகளைப் பரிசோதித்த போது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.அவை வெறும் வெள்ளி அரைஞாண் கொடிகளை தங்க முலாமிட்டுத் தாலிக்கொடிகள் போன்று நூதனமாக இயந்திரங்களால் உருமாற்றப்பட்டு அடகு வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து, குறித்த நிதி நிறுவன அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.