கூடுதல் பாதுகாப்புடன் பஜாஜ் பல்சர் 150 இந்தியாவில் அறிமுகம்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பல்சர் 150 மாடலில் ட்வின் டிஸ்க் பிரேக், கூர்மையான வடிவமைப்பு மற்றும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.புதிய பல்சர் 150 ட்வின் டிஸ்க் பிரேக் மாடல் மூன்று டூயல் டோன் நிறங்களில் – பிளாக் புளு, பிளாக் ரெட் மற்றும் பிளாக் க்ரோம் கிடைக்கிறது. டூயல் டிஸ்க் பிரேக் செட்டப் தவிர புதிய பல்சர் 150 மாடலில் ஸ்ப்லிட் சீட், ஸ்ப்லிட் கிராப் ரெயில்கள், நீண்ட வீல்பேஸ், அகலமான பின்புற டையர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இன்ஜின் மற்றும் சேசிஸ் டச்பாயின்ட்கள் மேம்படுத்தப்பட்டு இருப்பதால் ஒட்டுமொத்த மோட்டார்சைக்கிளின் சத்தம், அதிர்வுகள் மற்றும் முரட்டுத்தன்மை உள்ளிட்டவை வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இதன் இன்ஜின் மாற்றப்படவில்லை என்பதால் புதிய மாடலில் 149.5 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 14.85 பிஹெச்பி @9000 ஆர்பிஎம், 12.5 என்எம் டார்கியூ @6500 ஆர்பிஎம் செயல்திறன் கொண்டுள்ளது. மூன்று புதிய நிறங்களும் பல்சர் 150 ட்வின் டிஸ்க் பிரேக் மாடல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இந்திய 150சிசி வாகன விற்பனையில் பஜாஜ் பல்சர் 150 தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

புதிய ட்வின் டிஸ்க் பிரேக் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் பல்சர் 150 வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என பஜாஜ் ஆட்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல்சர் 150 மோட்டார்சைக்கிளை தேர்வு செய்வோருக்கு கூடுதல் ஆப்ஷன் கிடைப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 2018 பஜாஜ் பலசர் 150 ட்வின் டிஸ்க் வேரியன்ட் விலை ரூ.78,016 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பல்சர் 150 விலை ரூ.73,626 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like