இப்படியும் நடக்கிறதா?? தென்னிலங்கை மாணவியின் சோகக்கதை!

கம்பஹா கனேமுல்ல குடா பெல்லன ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு முகமூடி அணிந்துகொண்டு நேற்று திங்கட்கிழமை கம்பஹா வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளார்.

தென்னிலங்கையில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை மாணவி ஒருவர் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் அதனால் அவரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பாடசாலை நிர்வாக அதிகாரிகள் தடைவிதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட பாடசலை அதிபரை அழைத்து, மாணவியை மீண்டும் பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

எனினும் மீண்டும் அதே குற்றச்சாட்டு குறித்த மாணவி மீது சுமத்தப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி இந்த வருடம் நடைபெறவுள்ள ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதோடு ஒவ்வொரு வருடமும் தவணைப் பரீட்சைகளில் முதலாவது இடத்தையே வகித்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் எயிட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்து புறக்கணிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து தலையீடு செய்த மனித உரிமை ஆர்வலர்கள் கல்வியமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவனுக்கு கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அவருக்கான சகலவித நலன்திட்டங்களும் வழங்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.