25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பம்! (Video)


25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை ஏற்றிய பயணிகள் விமானம் இன்று மட்டக்களப்பு விமான நிலையத்தை சென்றடைந்தது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமலசிறியினால், உள்நாட்டு விமான வழிநடத்தல் சேவைக்கான அனுமதிப்பத்திரம், விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் சமன் எதிரிவீரவிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தம் மற்றும் விமானபடை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட விமான நிலையம் 25 வருடங்களின் பின்னர் புனரமைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

1488 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட ஓடு பாதையை கொண்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம், இலங்கையில் திறக்கப்படும் நான்காவது விமான நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய புனரமைப்பிற்காக 1400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான பயணிகள் விமான சேவையை முன்னெடுப்பதற்காக, சில தனியார் விமான சேவைகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான நிலைய வளாகத்தில், விமான பயற்சி பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.Get real time updates directly on you device, subscribe now.

You might also like