பெற்றோரால் வெறுக்கப்பட்டு மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு!!

பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன் மூன்று தினங்களாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு பின்னால் வசித்து வந்த இளைஞர்கள், உணவு கொடுத்து, பொலிஸார் வரும் வரை சிறுவனை கவனித்துள்ளனர்.சிறுவனை அவரது பெற்றோர் பல முறை சிறுவர் இல்லங்கள் மற்றும் விகாரைகளுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளதாக சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாயும், தந்தையும் தன்னை தாக்கி வீட்டை விட்டு விரட்டுவதாகவும் மது போதைக்கு அடிமையான தந்தையிடம் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.இதன்போது சிறுவன் அணிந்திருந்த கிழிந்த ஆடைகளுக்கு பதிலாக பொலிஸ் பரிசோதகர் சம்பத் விக்ரமரத்ன தனது பணத்தில் புதிய ஆடைகளை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார். விகாரை அல்லது சிறுவர் இல்லத்தில் வசிக்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் பெற்றோரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர், நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி, சிறுவனின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like