சிவாஜிலிங்கம் கைது

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்று அவருக்கு ஏற்கனவே முன்பிணை வழங்கியிருந்ததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்த விசாரணைகளுக்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் எம்.கே. சிவாஜிலிங்கம் அழைக்கப்பட்டிருந்தார்.

இது குறித்த விசாரணைகளுக்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் எம்.கே. சிவாஜிலிங்கம் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், வட மாகாண சபை அமர்வு காரணமாக அவர் விசாரணைக்கு சமுகமளித்திருக்கவில்லை. அவர் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்பட்ட சட்டத்தரணிகள் முன்பிணை விண்ணப்பம் செய்தனர்.

விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்று அது பற்றிய விசாரணைக்காக வழக்கைக் கடந்த 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தது.

எனினும், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனிவா சென்றிருந்ததால், கடந்த 6ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையிலும் ஆஜராகியிருக்கவில்லை.

அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளால் முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன்பிணை வழங்கினார்.

இந்நிலையில், நேற்று மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு பிணையாளிகளுடன் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.