சிறிலங்கா தலைவர்களுடன் ஐ.நா உதவிச் செயலர் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்திலும், அலரி மாளிகையிலும் இந்தச் சந்திப்புகள் தனித்தனியாக இடம்பெற்றன.

அதேவேளை, ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தினார். சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளும், ஜெப்ரி பெல்ட்மனுடன், ஐ.நா அதிகாரிகள் மூவரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகள் குறித்து, ஜெப்ரி பெல்ட்மன் மகிழ்ச்சி தெரிவித்தார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐ.நா உதவிச் செயலருடனான சந்திப்பின் போது, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நல்லிணக்க செயல்முறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இந்தச் சந்திப்பில், ஐ.நா அரசியல் விவகாரத் திணைக்களத்தின் ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மேரி யமாஷிடா, சிறிலங்காவில் ஐ.நாவின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் கீதா சபர்வால், ஐ.நா உதவிச் செயலர் பெல்ட்மனின் செயலர் மேரி சக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.