பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்!

கொழும்பு 2 இல் அமைந்துள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன அலுவலக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, விசாரணை அதிகாரிகளால் இந்த அலுவலகத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனைகளின் போது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸூக்கு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்திருந்த நிலையில் அவரது முன்னிலையில் அந்த அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது ஆவணங்கள் இருக்கும் இடம் தமக்குத் தெரியாது என ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலுள்ள காப்பகத்தில் வைத்து ஆவணங்கள் பூட்டப்பட்டுள்ளதாகவும், அதன் சாவிகள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, விசாரணை அதிகாரிகளால் நிறுவன வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.