வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் அச்சுறுத்தல் : வீதியிலும் பெண்கள் செல்ல முடியாத நிலை!!

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்த நான்கு நிதி நிறுவன ஊழியர்கள் அவரை செல்ல விடது தடுத்ததுடன் கடனை செலுத்தமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் குறித்த பெண் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார்.

இந்நிலையில் அவ்வீதியால் சென்ற இளைஞர்கள் சிலர் நிதி நிறுவன ஊழியர்களோடு முரண்பட்டதுடன் கடனை செலுத்தவில்லை என்றால் நீதிமன்றில் வழக்கு தொடுக்குமாறு கூறியதுடன் ஊழியர்களை அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணுக்கும் புத்திமதி கூறியதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறும் கூறியுள்ளனர், அதன் பின் குறித்த பெண் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.

குறித்த பெண் நான்கிற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றுள்ளதாகவும் கிழமையின் 5 நாட்களிலும் தவணை பணத்தினை செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண்ணின் கணவரும் பிரிந்து சென்றுள்ளமையினால் கடன்களை செலுத்துவதில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றார். கடனை பெறும் பொழுது கணவர் இணைந்தே இருந்துள்ளமை குறிப்படத்தக்கது.

பூந்தோட்டத்தை அண்டிய பகுதிகளான அண்ணாநகர், மகாறம்பைகுளம், காத்தார்சின்னகுளம், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்களில் கடன்களை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் குடும்ப சூழ்நிலைகள் வருமான மார்க்கங்கள் பற்றிய விடயங்கள் கணக்கிலெடுக்கப்படாமல் நிறுவனங்கள் கடன் வழங்கி வருவதாகவும்,

இதனால் பல குடும்பங்களிற்கிடையே பல பிரச்சனைகள் காணப்படுவதுடன், சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக கிராம அமைப்புக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.