சிறுமியின் தந்தையை பழிவாங்கவே கொலை; 20 வயது வாலிபனே செய்தான்: சீருடை மீட்பு!

“சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உள்பட நால்வர் துணை நின்றுள்ளனர்’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிர விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த பற்றையைப் பகுதியை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டினார். பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது. எனினும் தோடுகளை மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (6) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உள்பட நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். அவர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள்.

பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இவர்களின் திருட்டு அறியவர சிறுமியின் தந்தை சிவனேஸ்வரன், சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தந்தை தன்னையும் நண்பரையும் தாக்கியதற்கு பழிதீ்ர்க்கவேண்டும் என்ற வெறித்தனத்தோடு பிரதான சந்தேகநபர் கஞ்சாவைப் பாவித்து போதையில் இருந்துள்ளார்.

சிவனேஸ்வரன் றெஜீனா பாடசாலை முடித்து திரும்பும் போது, அவரை பிரதான சந்தேகநபர் கடத்திச் சென்று பற்றைக்குள் வைத்து கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். அதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சீருடை எரிக்கப்பட்டது என பிரதான சந்தேகநபரால் இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. எனினும் இன்று முற்பகல் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திய பிரதான சந்தேகநபர், சீருடை போடப்பட்ட இடத்தை காண்பித்தார். எனினும் கயிறு மற்றும் தோடுகளை மீட்க முடியவில்லை.

விசாரணைகளின் பின்னர் 5 சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் கூறினர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like