முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி!

சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி நீதிமன்றப் பதிவாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்தும் யோசனைக்கு எதிரி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மறுப்புத் தெரிவித்தார்.

சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தினார் என்று மல்லாகம் நீதிமன்றப் பதிவாளராகக் கடமையாற்றிய ஆனந்தராசா நந்தினிதேவி தெல்லிப்பளை காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறைப்பாடு வழங்கினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தமது அழைப்பை ஏற்று வாக்குமூலமளிக்க வரவில்லை எனத் தெரிவித்தும் முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாகவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான பெண் சட்டத்தரணியை மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் அவர் மன்றில் தோன்றத் தவறியமையால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த பெண் சட்டத்தரணிக்கு மன்று பிணை வழங்கி விடுவித்தது.

இந்த நிலையில் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 486ஆம் பிரிவின் கீழ் ஆள் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனுக்கு எதிராக காவற்துறையினர் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் சாட்சியான நீதிமன்றப் பதிவாளரிடம் வழக்குத் தொடுனர் தரப்பு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் குறுக்கு விசாரணைக்காக வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜி.அலேக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எதிரி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியிடம் குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.

வழக்கு விசாரணை தொடர்பில் வழக்கின் சான்றுப்பிரதி ஊடாக அறிந்துகொண்டதனை சாட்சி ஒத்துக்கொண்டார். சான்றுப் பிரதி எவ்வாறு பெறப்பட்டது என்று எதிரி தரப்புச் சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.

சான்றுப்பிரதியை அரச செலவில் பெற்றுக்கொண்டதாக நீதிமன்றப் பதிவாளர் சாட்சியமளித்தார். அந்த விடயத்தை கையிலெடுத்த எதிரி தரப்புச் சட்டத்தரணி, வழக்கின் சாட்சி எவ்வாறு அரச செலவில் எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மன்னார் நீதிமன்றம் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பதிவாளராகக் கடமையாற்றியது யார் என்று எதிரி தரப்புச் சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். அப்போது மன்னார் நீதிமன்றின் பதிவாளராக தான் கடமையாற்றியதாக சாட்சி தெரிவித்தார்.

அந்தக் காலப்பகுதியில் மன்னார் நீதிமன்ற நீதிபதி யார் என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் கடமையாற்றினார் என்று சாட்சி சாட்சியமளித்தார்.

இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மன்னார் நீதிமன்றம் மீதான கல் வீச்சு தொடர்பில் அங்கு பதிவாளராகக் கடமையாற்றிய நீங்கள் காவற்துறையில் முறைப்பாடு வழங்கினீர்களா? என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேட்டார்.

சாட்சி இல்லை என்று பதிலளித்தார்.“நீதித்துறைக்கே அச்சுறுத்தலாக அமைந்த அந்தச் சம்பவம் தொடர்பில் உங்களால் அப்போது முறைப்பாடு வழங்க முடியவில்லை.

தொலைபேசி ஊடாக உங்களுக்கு வந்த அச்சுறுத்தல் தொடர்பில் அன்றைய தினமே காவற்துறையில் முறைப்பாடு வழங்கவில்லை.

நீதிவானின் அனுமதியுடன் அப்போதைய யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் ஆலோசனையுடன் மறுநாள் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினீர்கள் என்று எதிரி சார்பில் நான் தெரிவிக்கின்றேன்.

அதனை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று சட்டத்தரணி சாட்சியிடம் கேட்டார். சாட்சி இல்லை என்று மன்றுரைத்தார்.

இந்த நிலையில் சட்டத்தரணிக்கும் நீதிமன்றப் பதிவாளருக்கும் இடையிலான இந்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்துவோமா? என்று மன்று எதிரி தரப்பிடம் வினவியது.

அதற்கு எதிரி தரப்புச் சட்டத்தரணி மறுப்புத் தெரிவித்ததுடன், வழக்கை எதிரி சார்பில் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக மன்றுரைத்தார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like