பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மகிந்த

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவிருந்த நிலையில், ஜனாதிபதி இன்று வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதனை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதனிடையே நேற்று சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், நாளை மறுநாள் திங்கட் கிழமை அல்லது செவ்வாய் கிழமை நாடாளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைத்தார். இதன் காரணமாக நாடாளுமன்றம் எதிர்வரும் 16 ஆம் திகதியே கூட முடியும்.

இவ்வாறான சூழ்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி, தன்னுடன் இணைந்து மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததாக கூறப்படுகிறது.

எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க ரவி கருணாநாயக்க கூறிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பது ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. இதனால், மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்குமாயின் அவசரமாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. வரவு செலவுத்திட்டத்தின் போது ரணில் தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடித்திருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால், ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டிருக்கும். ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியும் உத்தியோகபூர்வமாக பறிபோயிருக்கும். அப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள அணியை சேர்ந்த மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வமாக பிரதமராக நியமிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவது நிச்சயம் இல்லை என்பதன் காரணமாக அவசர கதியில் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகித்த வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

பெரும்பாலும் அத்துரலியே ரதன தேரரும் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கக் கூடும். எனினும் இந்த மூன்று பேரின் ஆதரவு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போதுமானதல்ல. மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் பேரம் பேசல்களை நடத்திய ஆதரவை திரட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அடங்களாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒருவர் அங்கம் வகித்து வருகிறார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் அங்கம் வகித்து வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like