மகிந்த – மைத்திரியின் இரண்டாவது விக்கட்டும் வீழ்ந்தது!

இன்றைய தினம் மஹிந்த தரப்பில் இருந்து விலகி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.

புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றிருந்த மானுஷ நாணயக்கார பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்திருந்தார்.

அவரை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன ஐக்கிய தேசிய கட்சிக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் இரண்டாவது நபர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். மேலும் பல உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனது பெரும்பான்மை உறுதி செய்து விட்டதாக மக்கள் மத்தியில் அறிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஐக்கிய தேசிய முன்னணி 100 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 103 உறுப்பினர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி 6 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. ஐக்கிய தேசிய கட்சிக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ரணில் தலைமையிலான கட்சி 115 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.