பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

வேலணை பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அராலி சந்தி மற்றும் வங்களாவடி பகுதியில் பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் உறுப்பினர் பிரகலாதன் ஆகியோர் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை சந்தித்து தமது பிரதேசத்தின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடிய போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்திப்பு தொடர்பில் வேலணை பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,

வேலணைப் பிரதேசத்தில் உள்ள பல வளங்கள் சட்டவிரோத கும்பல்களினால் சூரையாடப்படுவதால், நிலையான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கூட இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

அராலிசந்தி மற்றும் வங்களாவடி சந்தியிலும் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட வேண்டுமென்றும், கடந்த 3 வருடங்களிற்கு முன்னர் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மூலமும் தெரியப்படுத்தி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தல்கள், கற்றாழை கடத்தல், இரும்பு கடத்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதால், சில விடயங்கள் பொலிஸாரினால் கட்டுப்படுத்தப்படும் நிலையில் பல விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இரு பகுதிகளிலும் பொலிஸ் காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை சந்தித்து மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்.

எமது கோரிக்கையை ஏற்று கொண்ட வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தான், பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளதுடன், பொலிஸ் காவலரண்கள் அமைக்க காணி ஏற்பாடு செய்து தரும் பட்சத்தில் பொலிஸ் காவலரண்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.