பரீட்சைகள் திணைக்களத்தை ஆட்டங்காண வைத்த மாணவி! கிடைத்தது பெரும் வெற்றி

கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு சாதாரண தரப் பரீட்சையில் கிடைக்கப்பெற்ற பீ சித்தி ஐந்து வருடங்களின் பின்னர் ஏ சித்தியாக மாற்றப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் சுயாதீன விசாரணைக்குழுவின் ஊடாக ஆங்கிலப் பாட விடைத்தாள்களை மீளவும் மதிப்பிட்டதன் ஊடாக குறித்த மாணவிக்கு பீ சித்திக்குப் பதிலாக ஏ சித்தி கிடைத்துள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லேரியாவை வசிப்பிடமாகக் கொண்ட முதலிகே தொன் கவிதா சந்தமினி வீரசிங்க என்ற மாணவிக்கே ஐந்து வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு ஏ சித்தி கிடைத்துள்ளது.

2013ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்குத் தோற்றிய அந்த மாணவிக்கு பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் எட்டு ஏ சித்திகள் கிடைத்துள்ள அதேவேளை ஆங்கிலப் பாடத்தில் பீ சித்தியும் கிடைத்துள்ளது.

எனினும் ஆங்கிலப் பாடத்தில் தனக்கு கிடைத்துள்ள பீ சித்தி ஏ சித்தியாக மாற்றப்பட வெண்டுமென உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை அந்த மாணவி தாக்கல் செய்திருந்தார்.

ஐந்து வருடங்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வழங்கப்பட்டதுடன் மனுதாரராக அந்த மாணவியின் ஆங்கிலப் பாட விடைத்தாள்கள் சுயாதீன குழுவொன்றின் மூலமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.

அதனடிப்படையில் பரீட்சைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய சுயாதீன குழு ஆங்கில விடைத்தாள்களை மதிப்பிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பீ சித்தி ஏ சித்தியாக திருத்தப்பட வேண்டுமென ஆணையாளருக்குப் பரிந்துரைத்துள்ளது.

அதனடிப்படையில் திருத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறு அந்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like