கொழும்பு தற்கொலை குண்டு தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததா?

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டி அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவத்துள்ளார்.

அத்துடன், குறித்த தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தது என தெரிவிக்கப்படும் கருத்தினையும் அவர் முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கை அதிகாரிகள் அதனை பகிர்ந்துகொள்வதில் தோல்வியை கண்டுள்ளனர்.

நாங்கள் எச்சரிக்கையுடன் இல்லை என்பதை உறுதியாக கூறமுடியும். இந்நிலையில், இலங்கையின் தற்போதையை அரசியல் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டி அறிந்திருக்கவும் இல்லை, இலங்கைக்கு தகவல் வழங்கவும் இல்லை.

அத்துடன், இலங்கைக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களை பகிர்வதில் இடைவெளியேற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.