ஒவ்வொருவராக மயங்கி வீழ்ந்து இறந்த கொடுமை; வவுனியாவில் இன்று என்ன நடந்தது?

வவுனியாவில் நகரசபை ஊழியர்கள் நால்வர் இறைச்சிக் கழிவுக் குழியொன்றினுள் வீழ்ந்து இன்றைய தினம் மரணமடைந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்தகரித்துக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தினை நேரில் பார்த்தவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று மதியம் 1 மணியளவில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிப்பதற்கு குழியினுள் ஒருவர் இறங்கி நீரைப்பாச்சி அடித்துள்ளார்.

இதன்போது ஒருவர் திடீரென மயக்கமுற்று குழியில் வீழ்ந்துள்ளார். இதனால் மற்றையவர் அவரை காப்பாற்ற முற்பட்டபோது ஏனைய இருவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க முற்பட்ட வேளை அவர்களும் மயக்குமுற்று குழிக்குள் விழ காப்பாற்றிக்கொண்டிருந்தவரும் மயக்கமுற்று வீழ்ந்தார்.

இதன் காரணமாக கழிவுப் பொருட்கள் அடங்கிய குழியில் வீழ்ந்தமையினால் உடனடியாக யாராலும் காப்பாற்ற முடியத நிலையில் அங்கு கடமையில் இருந்து காவலாளியும், வாகனத்தின் சாரதியுமாக மூவர் அவர்களை வெளியில் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் இயலாத நிலையில் காணப்பட்டது.

இதன்பின்னர் கூக்குரல் இட்டு மற்றவர்களை அழைத்ததுடன் நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு இது தெரியப்படுத்தியதுடன் அம்புலன்ஸ் சேவைக்கும் அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் அவர்கள் நால்வரும் பலியாகியுள்ளதாக தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் சகாயமாதாபுரத்தினை சேர்ந்த செல்வராசா, வசந்தகுமார், ஜி. சசிக்குமார், பூந்தோட்டத்தை சேர்ந்த சந்தனசாமி ஆகிய நகரசபை சுகாதார தொழிலாளிகளான குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

இவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது வவுனியா செய்தியாளர் கூறுகிறார்.