நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அதிகமானோரை காவுகொண்ட தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பில் இதுவரையில் 110 பேர் உயிரிழந்ததோடு 265 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளோரில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இன்னமும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திற்கு ஆதவன் செய்திக்குழு இன்று விஜயம் செய்திருந்தது.

அந்தப் பிரதேசமே சோகமயமாக காணப்பட்டதுடன் ஒவ்வொரு வீடுகளிலும் வெள்ளைக் கொடிகள் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்டுவப்பிட்டிய பங்கில் இரண்டு பொது மயானங்கள் உள்ளன. அதிலுள்ள செல்வக்கந்த பொது மயானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்றுவரை 43 பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை அதே பங்கிலுள்ள, டேவிட்வத்த பொது மயானத்தில் 42 பூதவுடல்கள் இதுவரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், இன்றைய தினம் 42 ஆவது பூதவுடல் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் வழிபாடுகளுக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.