கடும் அச்சத்தில் நீர்கொழும்பு மக்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நீர்கொழும்பு வாழ் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நீர்கொழும்பில் இஸ்லாமியர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, குளியாப்பிட்டி உட்பட பல பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்கு சென்று கடைமையை நிறைவேற்ற முடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக இஸ்லாமிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

நகரில் இனந்தெரியாத குழுக்கள், இரவு வேளைகளில் வீடுகளுக்கு வந்து அச்சுறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தப் பகுதியில் முப்படையினரும் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அச்ச உணர்வுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் காரணமாக நீர்கொழும்பு மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடவடிக்கைகளும் மந்த கதியில் காணப்படுவதுடன், ஓட்டோ சாரதிகள் தொழில் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதால், கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நீர்கொழும்பு நகரம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் வருகை தருகின்ற நகரமாகும். தற்போது அந்தப் பகுதிகள் வெறிச்சோடி கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.