யாழ். குப்பிழானில் வீடுகளை நோட்டமிட்ட மர்மநபரால் பரபரப்பு!

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியில் இன்று அதிகாலை-01 மணியளவில் மோட்டார்ச்சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபரொருவர் அப்பகுதியிலுள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த நபர் மேற்படி பகுதியிலுள்ள வீதியால் செல்வதும் குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின்னர் மீண்டும் திரும்பி வருவதுமாக செயற்பட்டுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞரொருவர் தனது வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தவே அவர்கள் குறித்த நபரைத் துரத்திச் சென்றுள்ளனர். எனினும், குறித்த நபர் அங்கிருந்து மோட்டார்ச் சைக்கிளை வேகமாகச் செலுத்தித் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் 30 வயதுக்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவரெனவும், தனது முகத்தை கறுப்புக் ஹெல்மெட்டால் மூடியிருந்ததாகவும் சந்தேகநபரை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் திருடுவதற்காக வந்தாரா? அல்லது வேறெதுவும் நோக்கத்துடன் வந்தாரா? என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். குப்பிழான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் கோயிலுக்கு அருகாமையில் வயோதிபத் தம்பதியர் தனித்திருந்த வீடொன்றின் யன்னல் கம்பிகளை வளைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். குறித்த வீட்டில் பெறுமதியான நகைகள் எதுவும் கிடைக்காமையால் 45 ரூபா பணத்தை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். எனினும், வீட்டிலிருந்தவர்களை தாங்கள் ஐ. எஸ். தீவிரவாதிகளெனவும், குண்டு வைப்போம் எனவும் கொள்ளையர்கள் கடுமையாக மிரட்டியிருந்தனர்.

குறித்த சம்பவம் கடந்த-31 ஆம் திகதி அதிகாலை-01.15 இடம்பெற்றிருந்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்குள் குப்பிழான் வடக்கில் திருட்டு இடம்பெற்ற அதேநேரத்தில் குறித்த நபர் நடமாடியுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.