பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவி பறிப்பு

திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் இறந்து உள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலித் வீரசிங்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே இந்தக் குழந்தை மரணித்துள்ளதாக, மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு அரசாங்கத்தின் எந்தவொரு உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லையெனவும், கணவர் மட்டுமே தொழில் புரிவதால், குடும்பத்தை கொண்டுசெல்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியிருந்ததாகவும் குடும்ப தலைவியான குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரோடு உள்ள மூன்று பிள்ளைகளில் இருவர் பாடசாலைக்கு செல்வதாகவும், ஒருவர் முன்பள்ளிக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 11 மாத குழந்தை உணவில்லாமல் இறந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹம்பாந்தோட்ட மாவட்ட செயலாளருக்கு ராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை பட்டினியால் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது என்று ஹம்பாந்தோட்ட மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திரா தெரிவித்தார்.

திஸ்ஸமகாரம, ஜியாஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த மலித் வீரசிங்க எனும் 11 மாதக் குழந்தையே கடந்த மே மாதம் 14ஆம் திகதி உண்ண உணவில்லாமல் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.

இக் குழந்தைக்கு மேலும் மூன்று சகோதரர்கள் காணப்படுகின்றனர்.

என்றாலும் குறித்த குடும்பத்திற்கு சமூர்த்தி திட்டத்தை வழங்க, பிரதேச சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுத்தபோதும், குடும்பத் தலைவரான குழந்தையின் தந்தை சமூர்த்தி திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காதன் காரணமாக அதனை வழங்க முடியாமல் போனதாகத் தெரியவந்துள்ளது.

இருந்தபோதும், நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.