நல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி! ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்

சமகாலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு நல்லூர் ஆலய வளாகத்தில் சோதனை சவாடிகள் அமைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடல் ரீதியான பரிசோதனைகளால் பக்தர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்ட நிலையில், அதற்கு மாற்றீடாக ஸ்கானர் இயந்திரம் நேற்று பொருத்தப்பட்ட நிலையில் இன்று அது அகற்றப்பட்டுள்ளது.

பக்தர்கள் அணிந்து செல்லும் நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதால், ஆலய வளாகத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு ஸ்கானர் இயந்திரம் அகற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்தச் சோதனை நடவடிக்கைகளால் கோவிலுக்குச் செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, வடக்கு ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை கோவில் சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

நல்லூர் ஆலயத்தில் தற்போது ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்து மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தாயகத்தில் கடும் யுத்தம் நிலவி காலப்பகுதிகளில் கூட நல்லூர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். எனினும் தற்போது சமாதான சூழ்நிலையில் இவ்வாறான நெருக்கடி நிலையால், ஆலயத்திற்கு வரும் பக்கதர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.