பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை! வெளியானது அறிவிப்பு

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது.

முன்னர், எக்ஸ்போ எயர் என்ற பெயரில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமே தற்போது, பிட்ஸ் எயர் நிறுவனம், என்ற பெயரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைகளையும், வெளிநாடுகளுக்கான சரக்கு விமான சேவைகளையும் நடத்தி வருகிறது.

பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.