யாழ்.பல்கலை மாணவர்களின் முயற்சி – பிரதான தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்தன

தற்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக அனைத்துத் தமிழ் கட்சிகளையும் பொது நோக்கோடு ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான அவசர சந்திப்பொன்று இன்று (சனிக்கிழமை) முன்னிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ. சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.அருந்தவபாலனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டனர்.

அத்துடன், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் எஸ். ராகவன் ஆகியோரும் ரெலோ அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் நலன் நோக்கி, பொது நிலைப்பாடொன்றுக்கு வருவதற்கான இணக்க நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவர் என்றும் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததோடு அடுத்த சந்திப்பை எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருருப்பதாகவும் அறிய வருகிறது.

இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தனித்தனியாக நிலைப்பாடுகளை வெளியிடாமல் தமது நிலைப்பாட்டை அறிக்கை வடிவில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனினும் இந்த செய்தி வரையப்படும் வரை மாணவர் ஒன்றியத்திடமிருந்து அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை.