யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் அடித்து கொல்லப்பட்டாரா? குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமைக்கு நெல்லியடி பொலிஸாரே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 40 வயதான ஜே.ரூபன் என்பவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி பொலிஸாரினால் நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரால் தாக்கியதால் தான் ரூபன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸார், உயிரிழந்தவர் அலரி விதையை உட்கொண்டிருந்தார். பொலிஸ் நிலையத்தில் வாந்தி எடுத்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத்தலைவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பில் விசாரணைக்காக அவரை அழைத்த போதும் அவர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தராமல் தலைமறைவாகியிருந்தார். எனினும் அந்தப் பகுதியில் பொலிஸாரினால் அவதானிக்கப்பட்ட ரூபன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட வேளை, இரவு 10 மணியளவில் அவர் வாந்தி எடுத்தார். தான் அலரி விதை உட்கொண்டதாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததால் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.