பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிராணி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சஜிராணி அவர்களினால் உருவாக்கப்பட்ட அப்பள உற்பத்தி தொழிற்சாலை தற்போது அதன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது.

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சுயமதிப்பீட்டு மாநாட்டில் சாதனையாளர் வரிசையில் சஜிராணி அவர்கள் கலந்து கொண்டு, தான் கணவரை இழந்த பின்னர் எவ்வாறு இந்த சமூகத்தில் ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக கொண்டு செல்கின்ற தனது சாதனைப் பயணம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதன் பின்னர் அவரது தொழில் முயற்சியினை விருத்தி செய்வதற்காக அவருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா கடனுதவி தேவைப்படும் விடயத்தினையும் DATA அமைப்பிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

அவரது கோரிக்கையினை ஏற்று அவரது தொழில் முயற்சிக்கு கடனுதவி வழங்குபவர் ஒருவரை DATA அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. செல்வி விஜயலட்சுமி பசுபதிப்பிள்ளை அவர்கள் இந்த நிதியினை அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி.ரூபாவாதி கேதீஸ்வரன் அவர்களினால் காசோலை வழங்கப்பட்டதோடு இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.இந்திரராஜன் பிரதாபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜிராணி அவர்களின் அப்பள தொழிற்சாலையில் 06 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள் அத்தோடு அங்கு பணியாற்றுபவர்கள் போரினால் பெரும்பாலும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது .

போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நிலையில் இருந்து மீளலாம் என்ற தொனிப்பொருளோடு DATA பல்வேறு திட்டங்களை அண்மை காலங்களில் நடாத்தி வருகின்றது .