ஜனாதிபதி கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? தமிழர் பகுதியை சேர்ந்த ஐவர் கைது

கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், கட்டுநாயக்க பகுதியில் வைத்து ஜனாதிபதி கோட்டாபயவை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் எனத் தெரிவித்து வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட ஐவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது அவரின் குடும்பத்தில் எவராவது கொலை செய்யப்பட்டால் பாரிய பணத்தொகையுடன் வெளிநாடுகளில் நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக்கொள்ளவும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான்,கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன்,விசுவமடு தர்மபுரத்தைச்சேர்ந்த வேலு கோணேஸ்வரம்,விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன், மற்றும் மஸ்கெலியாவைச்சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீதுவ ஜயவர்தனபுர அமந்தோலுவ பிரதேசத்தில் ஒருவீட்டில் இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட மதன் எனும் சந்தேகநபருடைய சகோதரிகள் இருவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களில் ஒருவருக்கு இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஊடகம் கூறியுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இந்த சந்தேகநபர்கள் ஐவரும் ஒன்றிணைந்து மதுபானம் அருந்தி இந்த சூழ்ச்சியை தீட்டியுள்ளதாகவும் ,அதில் பிரதான சூத்திரதாரியாக றிப்கான் என்பவர் இனம்காணப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் வெளிநாடுகளில் வேலை செய்தவர் என்றும் , அவருக்கு ஹிந்தி மற்றும் பிறமொழிகளில் பரிச்சயமானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த நபர், முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், அவர் சிக்கிக்கொண்டால் குறித்த அமைச்சரின் செல்வாக்கின்மூலம் வெளிவர முடியும் எனவும் கைதான நபர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக குறித்த தென்னிலங்கை ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது