இலங்கைக்கு கிடைத்த பெருமை! மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரதமர் மஹிந்த

உலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி சுட்டி அறிக்கையானது இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அவ்வறிக்கையின் பிரதியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரொபேட் ஜக்காம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோரிடமிருந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார்.

மனித அபிவிருத்தி சுட்டியில் கடந்த ஆண்டு 76 ஆவது இடத்திலிருந்த இலங்கை இவ்வருடம் 71 ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிகளிடம் பிரதமர் ராஜபக்ஷ அவருடைய மகிழ்ச்சியை வெளியிட்டார்.

அதன்போது இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் அதேவேளை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஐ.நா பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்தனர்.

இந்நிலையில் இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியின் பிரகாரம் முதலாவதாக நோர்வேயும், இரண்டாவதாக சுவிட்ஸர்லாந்தும், மூன்றாவது இடத்தில் அயர்லாந்தும் உள்ளன.

அதேவேளை அமெரிக்கா 15 ஆவது இடத்தையும், இந்தியா 129 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருப்பதுடன், இறுதியாக 189 ஆவது இடத்தை நைகர் பெற்றிருக்கிறது.