மாவைக்கு வந்த பெரும் சோதனை! பல இரகசியங்கள் வெளிச்சத்தில்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வைக்கும் திரைமறைவு முயற்சிகள் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சூடு பிடித்துள்ளது.

தமிழ் தேசிய அரசியலில் பெரும் சீரழிவுகளை ஏற்படுத்தி வரும் கனடா கிளையினரே இந்த முயற்சிகளின் பின்னணியில் செயற்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்தின் பின் தமிழ் அரசியலில் குழு வாதத்தையும், கூலிப்படை அரசியலையும் கனடாவிலுள்ள தமிழ் அரசு கட்சியினர் விரைவாக உருவாக்கி வருகின்றதோடு பெருமளவு பணத்தை வழங்கி, இந்த குழப்பங்களை அவர்கள் உருவாக்கி வருவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசுக்கட்சிக்குள் ஒரு அணியை உருவாக்கி, வடமாகாணசபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வந்த அவர்கள், அரசியல் கூலிப்படையை போல செயற்படும் அந்த உறுப்பினர்களிற்கு தாராளமாக சலுகைகள் வழங்கி வந்ததன் விளைவாக, தமிழ் அரசியலில் பெரும் குழப்பமும், பிளவும் ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் கனடா கிளையின் எடுபிடிகளாக செயற்பட்டவர்கள் பலர் இப்பொழுது, சுமந்திரன் அணியில் செயற்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை கடந்த தேர்தலில் சுமந்திரனின் தேர்தல் பிரச்சார நிதியென கனடா கிளையினர் பெருமளவு நிதி திரட்டியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் கனடா கிளையினரின் பிரியத்திற்குரியவர்களான ஆர்னோல்ட், சயந்தன், சத்தியலிங்கம் ஆகியோர் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கப்படவுள்ளனர்.

சத்தியலிங்கத்தை களமிறக்குவதில் வன்னியில் எந்த நெருக்கடியுமில்லை. சார்ள்ஸ் நிர்மலநாதன் தமிழ் அரசு கட்சியென்றபோதும், அவர் உரிமை சார்ந்த விடயங்களில் சில சமயங்களில் விடாப்பிடியாக நிற்பது கட்சி பிரமுகர்களுக்கு உவப்பாக இருக்கவில்லை எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன் அவரது ஆட்சேபணை, தோல்வியடைவது பற்றி கட்சி அக்கறை காட்டாது. தமது பிடிக்குள் நிற்காத சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்ற ஒருவர் அல்லாமல், சத்தியலிங்கம் போன்ற ஒருவர் வெல்வதை கட்சி பிரமுகர்கள் விரும்புகிறதாகவும் தெரியவருகின்றது.

ஆனால், யாழில் நிலைமை மிகவும் சிக்கலான நிலமை உருவாகும் . ஏனெனில் அங்கு ஆர்னோல்ட், சயந்தன் இருவரும் களமிறக்கப்படவுள்ள நிலையில், இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் அதிகபட்சமாக 4 ஆசனங்களைத்தான் வெல்லும் என கருதப்படுகிறது. இந்த நான்கில் ஒன்றாக, ஆர்னோல்ட் அல்லது சயந்தன் இருக்க வேண்டுமென சுமந்திரன் மற்றும் கனடா கிளை விரும்புவதாக தெரியவருகின்றது.

அதற்கான வழிகளை இலகுபடுத்தும் ஒரு வழியாக, நிச்சயமாக வெற்றியடைய கூடியவர் என கருதப்படும் ஒருவரை போட்டியிருந்து அகற்றுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, மூத்தவர்கள் வழிவிட வேண்டுமென்ற கோசத்தை உருவாக்கி, மாவையை ஒதுங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும் மகளிர் அணியின் செயற்குழு கூட்டம் அண்மையில் வவுனியாவில் நடந்தபோது கூட்டத்திற்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனினும், திடுதிப் என சுமந்திரன் அழையா விருந்தாளியாக கூட்டத்திற்குள் நுழைந்தமை ஏற்பாட்டாளர்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை கூட்டத்தில் சுமந்திரன் மட்டும் கலந்து கொண்டு, அதை பேஸ்புக்கில் பதிவிட்டது, கட்சிக்குள் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், தாம் அவரை அழைக்கவில்லை என்பதோடு , எந்த அறிவித்தலுமில்லாமல் சுமந்திரன் திடீரென நுழைந்ததாகவும் இளைஞரணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பிலுள்ள இளைஞர் அணியின் சிலர் சுமந்திரனுடன் நெருங்கி செயற்படுகின்றதாக குறிப்பிட்ட அவர், அவர்கள்தான் சுமந்திரனை அழைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கைகள், இளைஞர் அணி, சுமந்திரன் அணி மாதிரியான தோற்றம் உருவாகி விடும் என்பதை அவர்களிற்கு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தெரிவித்துள்ளார்.

அரசியலை இப்போதுதான் அறியும் இளைஞர்கள் மத்தியில் கூட்டங்கள் வைத்து, அமைச்சு பதவியை ஏற்பது, மாவை போன்ற வயதானவர்கள் ஒதுங்குவது என்ற கோசத்தை வலுப்படுத்த சுமந்திரன் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் , இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா இருவரும அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதென்ற திட்டத்தை எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளதாகவும்,

தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர்களை நாடாளுமன்றம் அனுப்பலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதெனினும், அடுத்த முறை இரண்டு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்குமென்பது நிச்சயமல்ல என்றும், அவதானிகள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரத்தை மாவை சேனாதிராசா தரப்பும் அறிந்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கட்சியின் பெரும்பாலானவர்கள் மாவை சேனாதிராசாவை ஆதரிப்பவர்கள், என்கின்ற நிலையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மட்டத்தில் கடந்த சில தினங்களாக இந்த விடயம் விவாதிக்கப்பட்டு வருகிறதாகவும், மாவைக்கு எதிராக நகர்வுகளை ஆரம்பத்திலேயே இல்லாமல் செய்வதென , அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.