யாழ். கட்டளை தளபதி தர்ஷனவின் நடவடிக்கையால் இளையோர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அதிரடி நடவடிக்கையால் இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளையோர்கள் யாழ்ப்பாண கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

இவ்வேலைகளுக்கு 50 இளையோர்களை நியமிக்கவே பாதுகாப்பு அமைச்சு முதலில் அனுமதி வழங்கி இருந்தது. ஆயினும் நூற்று கணக்கில் இளையோர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு இன்று சனிக்கிழமை காலை இராணுவத்தின் மனித நேய செயல் திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் நெல்லியடி அலுவலகத்தில் கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
நேர்முக தேர்வுக்கு வந்திருந்த இளையோர்களில் ஒருவர் இவ்வேலைகளுக்கு 100 இளையோர்களையாவது நியமிக்க நடவடிக்கை எடுங்கள் என்று கட்டளை தளபதியை விநயமாக கேட்டு கொண்டார். இவ்வேண்டுகோளை கட்டளை தளபதி சாதகமாக பரிசீலித்ததுடன் சில மணி நேரங்களுக்குள் பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை மேற்கொண்டார்.
இவரின் பரிந்துரையை ஏற்று கொண்ட பாதுகாப்பு அமைச்சு 150 தமிழ் இளையோர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதியை வழங்கியது. இதன்படி 100 இளையோர்கள் வருகின்ற வாரங்களிலும், 50 இளையோர்கள் ஓரிரு மாதங்களுக்கு பின்னரும் நியமனம் பெற உள்ளனர்.
இவ்வேலைகளுக்கு விண்ணப்பித்து நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டு இருந்த இளையோர்கள் அனைவருக்கும் நியமனம் கிடைக்கின்ற வாய்ப்பும் இவ்வனுமதி மூலமாக கிட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.