வவுனியாவில் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்குட்பட்ட துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள பிரதேசசபைக்கு சொந்தமான கடையில் இருந்து பிரதேசசபையினர் பொருட்களை வெளியில் வீசியமையினால் விதவைப் பெண்ணொருவர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த விதவைப்பெண் தெரிவிக்கையில்

கணவரால் கைவிடப்பட்ட நிலையில் எனது 17 வயது மகன் மற்றும் மகளுடன் துட்டுவாகையில் வாழ்ந்து வந்தேன். மகனே எங்கள் குடும்பத்தினை பார்த்து வந்தார். இந் நிலையில் அண்மையில் மகன் விபத்தொன்றில் மரணித்துவிட்டார். இதனால் மகளை தனியாக விட்டு வீட்டுவேலைக்கோ கூலி வேலைக்கோ செல்ல முடியாமையினால் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது தொழில் செய்யவேண்டும் என எண்ணினேன்.

பிரதேச சபையிடம் கடையைப்பெற்று நடத்திவந்த ஒருவர் குறித்த கடையை நடத்துமாறும் அதற்காக தனக்கு 45000 ரூபா தருமாறும் தெரிவித்தார். நுண்நிதி நிறுவனத்திடம் கடனைப்பெற்று அப்பணத்தினை அவரிடம் எழுத்துமூல சாட்சிகளுடன் ஒப்படைத்து கடையில் தேனீர்க்கடையொன்றினை நடத்திவந்தேன்.

பிரதேசசபையிடம் நான் கடையை பெறாவிட்டாலும் நான் கடையை நடத்தவேண்டும் என்பதற்காக 500 ரூபா செலுத்தி கடைக்கான வருடாந்த உரிமத்தை பெற்றேன். அத்துடன் தேனீர்க்கடை என்பதனால் மருத்துவ சான்றிதழையும் நானும் எனது தங்கையுமாக பெற்றதுடன் பிரதேசசபை எனது பெயரிலேயே இரண்டு பற்றுச்சீட்டுக்களையும் ஒரே தினத்தில் வழங்கியிருந்தது.

இந் நிலையில் எனக்கு கடை கொடுத்தவர் பிரதேசபையிடம் கடை வேண்டாம் என தெரிவித்ததை அடுத்து குறித்த கடையில் நான் வைத்திருந்த பொருட்களை வெளியில் வைத்துவிட்டு எனது வாழ்வாதாரத்தை சிதைத்து என்னை நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டனர் பிரதேசசபையினர்.

ஒரு விதவைப்பெண் என்றும் பார்க்காமல் மனிதாபிமானம் இன்றி பிரதேசசபையினர் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள செட்டிகுளம் பிரதேசசபையின் தலைவரிடம் கேட்டபோது,

ஏமது பிரதேசபைக்கு சொந்தமான துட்டுவாகை இலக்கம் 1 கடை குறிஞ்சிமலர் என்பவருக்கு 14.02.17 அன்று ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. மாதாந்தம் 1187.50 சதம் அறவிடப்பட்டு வந்துள்ளது.

குறித்த நபர் வாடகைப்பணத்தினை 3 மாதங்களாக செலுத்த தவறியமையினால் கடை மூடப்படுவதற்காக அறிவித்தல் கடிதம் மூலம் 10.05.2018 அறிவிக்கப்பட்டு 28.05.2018 அன்று கடையை மூடுவதற்காக அறிவித்தலும் வழங்கப்பட்டது.

அதனையடுத்து 05.06.2018 இல் கடை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 12.06.2018 அன்று பாதிக்கப்பட்ட நபருக்கான தீர்வை சபை கூடி தீர்மானித்து வழங்கும் என தெரிவித்தார்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like