உன் கணவர் புலி, இதற்கு பிச்சை எடுக்கலாம் என்றது குற்றமா? ஒன்று திரளும் தேரர்கள்!

“பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் சிறைத் தண்டனைத் தொடர்பாக எமக்கு சந்தேகம் உள்ளது” என பொதுபல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்,

இலங்கையில் பல குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது நீதி நிலைநாட்டப்படவில்லை. இலங்கை வரலாற்றில் மிக மோசமான மத்திய வங்கி ஊழல் தொடர்பிலும் கூட எவருக்கும் தண்டிப்புகள் வழங்கப்படவில்லை.

ஆனாலும் சிறியதோர் குற்றச்சாட்டுக்காக ஞானசாரர தேரரை சிறையில் அடைத்த விடயம் என்பது அநீதியான விடயம் என்பதே எமது பார்வையாகும்.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் “உன் கணவர் ஒரு புலி இதை விடவும் பிச்சை எடுத்து பிழைக்கலாம்” என நீதிமன்றத்தில் வைத்து ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன இதன்காரணமாகவே ஞானசார தேரருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

எனினும் இது இத்தகைய தண்டனைக்குரிய குற்றம் அல்ல பிரகீத் எக்னெலிகொட மீது அவர் கொண்டிருந்த எண்ணத்தையே வெளிப்படுத்தினார். இவ்வாறான குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டிப்புகள் வழங்கப்படுமாயின் நாடு முழுவதும் புதிய நீதிமன்றங்கள் மட்டுமல்லாது, ஏராளமான சிறைச்சாலைகளும் அமைக்கப்படல் வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த முறைகேடான அரசில் இருந்து நாட்டினை விடுவிக்க தமிழ், மற்றும் முஸ்லிம் சகோதர இனங்களுடனும், பௌத்த அமைப்புகள், தேரர்களிடம் கலந்துரையாடி வருகின்றோம் இதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் விதாரந்தெனிய நந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.