மஹிந்தவிடம் உள்ள மர்மம்! கோட்டாவின் கொலைக் களம்? அம்பலமாகும் அடுகடுக்கான இரகசியங்கள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை ஆகிய இரு வழக்குகளும் நாட்டையே உலுக்கியிருந்தாலும் கூட இது வரையிலும் மர்மமாகவே தொடர்கின்றன. இவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? மறைக்கப்படும் மர்மங்கள் என்ன? போன்றவை தொடர்பாக பகிரங்கப் படுத்தும் ஓர் பதிவாகவே இந்தப் பதிவு அமையப்போகின்றது.

லசந்த, கீத் நொயர் விவகாரங்களுக்கு முன்னராக ஒரு தகவலை வெளிப்படுத்த வேண்டிய அல்லது நினைவுபடுத்த வேண்டிய சூழல் காணப்படுகின்றது. அதாவது ஊடகச் சுதந்திரம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் உண்மையிலேயே சுதந்திரமாக இயங்குகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இந்தக் கேள்வி இப்போதைய ஆட்சியிலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள ஒன்றுதான் ஆனாலும் கடந்த மஹிந்த அரசாங்கத்தில் இதுஉச்சத்தில் இருந்ததோர் கேள்வி என்பது முக்கியம். காரணம் மஹிந்த அரசாங்கத்தில் இருந்த 9 வருடக் காலப்பகுதியில் இலங்கையில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

2016 களில் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக்க அப்போது நாடாளுமன்றத்தில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். மேலும், “2006 ஜனவரி தொடக்கம் 2015 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக் காலப்பகுதியில், ஊடகவியலாளர்கள் மீது 87 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் உள்ளடக்கப்படும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டார். இது மட்டுமன்றி 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்கப்பட்டதோடு, நான்கு ஊடக நிறுவனங்கள் மீது ஐந்து தடவைகள் இக்காலப்பகுதிக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதையும் அப்போது சாகல ரத்நாயக்க சட்ட ஒழுங்கு அமைச்சராக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எனினும் அவற்றிக்கான தீர்வுகள் எந்த மட்டத்தில் உள்ளன? விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளது என்பதும் கூட பிரம்ம ரகசியமாக பேணப்பட்டு வருகின்றது என்பது உண்மையே.

லசந்தவின் கொலை விவகாரத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் ஓர் விவகாரமாகவே இன்றும் தொடர்கின்றது. இந்த கொலைக் களம், அரங்கேற்றப்பட்ட முறை தொடர்பான தெளிவுகள் அனைவருக்கும் இருந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை பார்ப்பது முக்கியம். ஆனாலும் அதற்கு முன்னர் சில விடயங்களை நினைவு படுத்திவிட்டு லசந்தவின் கொலைக்குச் செல்லலாம்.

லசந்தவின் கொலையில் பிரதானமாக குற்றம் சுமத்தப்படுவது கோட்டாபய ராஜபக்ஷவை என்றாலும், மஹிந்த மீதும் சந்தேகக்கணைகள் உண்டு ஆனால் இவர்களின் குற்றச்சாட்டு பொன்சேகாவையே சுற்றி வருகின்றது.

இந்தக் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்த 2017 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “தனக்கு கொலையாளி யார் என்பது தெரியும்” என்றதோர் கருத்தை முன்வைத்திருந்தார்.

2017 ஜனவரி காலப்பகுதியில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மஹிந்த கருத்து வழங்கும் போது “சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார்” எனக் கூறியிருந்தார்.

மேலும், இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது தொடர்பாக குற்றப்புலனாய்வு என்னிடம் விசாரணை செய்தால் கொலையாளியின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார் எனத் தெரிவித்திருந்தார். எனினும் அவருடைய அடையாளப்படுத்தல் எவ்விதம் அமைந்தது என்பதும் கேள்விக்குறி.

லசந்தவின் கொலை, கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த காலத்தில் முறையாக இடம்பெறவில்லை என்றதோர் குற்றச்சாட்டு காணப்படுகின்றது. என்றாலும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கோட்டா நேர்காணல் ஒன்றினை வழங்கிய போது “லசந்தவின் கொலை தொடர்பாக கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள், ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னரானது எனக் கூறியிருந்தார். அதாவது 2015களுக்கு முன்னரான சாட்சிகள் என்பதே அவருடைய கருத்து.

மேலும், லசந்த, கீத் நொயர் வழக்குகள் தொடர்பாக அப்போதைய ஆட்சிகாலத்தில் ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் தொலைபேசி உரையாடல்கள் என்பனவும் உள்ளடங்கும் எனவும் கூறியிருந்தார். சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டவுடனேயே காலதாமதங்கள் இன்றி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கோட்டா சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆயினும் விசாரணைகள் காலதாமின்றி நடத்தப்பட்டிருந்தால் 2009 தொடக்கம் 2015 வரையிலான காலகட்ட விசாரணைகளின் வெளிப்பாடு எவ்விதம் அமைந்திருந்தது என்பதும், அதன் அடுத்த கட்டம் என்ன? என்பதும் கூட பிரதான கேள்வியாக எழுப்பப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே.

அதேபோன்று, 2006ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக் விமானக் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், அல்லது உடன்படிக்கை தொடர்பாக லசந்த விக்ரமதுங்க, கோட்டாபயவை பிரதானப்படுத்தி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து 2008களில்கோட்டாபய கல்கிசை நீதிமன்றில் லசந்தமீது வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பின்னர் லசந்த படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சண்டே உரிமை வேறு தரப்பினருக்கு கைமாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோட்டாவிடம் பத்திரிகை நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதன் பின்னர் பத்திரிகை மீதான கோட்டாவின் வழக்கு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இடத்தில் லசந்தவின் கொலைக்கும் – கோட்டாவின் தொடர்புக்கும் இடையிலானதோர் சந்தேகப் பிணைப்பினை ஏற்படுத்துவதாகவே அமைவதாகக் கூறப்படுகின்றது.