வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சித்திரவதை குற்றச்சாட்டு

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சித்திவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபான் என்ற குடும்பத்தலைவரும் தீருவிலைச் சேர்ந்த குகதாஸ் விஜயதாஸ் (வயது-38) ஆகிய இருவருமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

“கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை ஊரில் குழு மோதல் இடம்பெற்றது. அதில் தாக்குதலுக்குள்ளான நண்பர் ஒருவரை அழைத்து வந்தேன். மற்றத்தரப்புக்கு சாதகமாகச் செயற்பட்ட பொலிஸார், என்னையும் நண்பனையும் உதயசூரியன் கடற்கரை மதவடிக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.

அத்துடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தமது லத்தியால் எமது உடம்பு முழுவதும் கடுமையாகத் தாக்கினர்.
எம்மைத் தாக்கியதை மறைத்து, பொலிஸார் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் எம்மை முற்படுத்தினர். எமக்கு பிணை வழங்கப்பட்டது.

ஊரணி வைத்தியசாலைக்குச் சென்றால் பொலிஸாரின் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தால், யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு வழங்கினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றோம்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே எம்மைத் தாக்கினார். அவர் சீருடையில்லாமல் சிவில் உடை அணிந்திருந்த போதே எம்மைத் தாக்கினார். அதனால் அவரது பெயரை அறியமுடியவில்லை.

எமது எதிராக முறைப்பாடு வழங்கியவருக்கு வெட்டுக்காயம் உள்ளது எனவும் அதனை எதனால் வெட்டி ஏற்படுத்தினார்கள் என்றும் கேட்டுத்தான் பொலிஸ் அதிகாரி எம்மைத் தாக்கினார்” என்று சுந்தரலிங்கம் கெங்காரூபான் தெரிவித்தார்.

“நண்பர்களுக்கு இடையே நடந்த தகராறு காரணமாக, தாக்குதலுக்குள்ளானவரை அழைத்து வந்து எம்மை ஏற்றிச் சென்று மதவடியில் வைத்து காதைப் பொத்தி அடித்தனர். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினார்கள். பாதத்திலிருந்து முதுகுப் பகுதி முழுவதும் பொலிஸார் தாக்கினர். அதனால் என்னால் நடக்கவே முடியாமல் இருக்கிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று வருகின்றேன். 3 முறை எக்ஸ்ரே எடுத்துள்ளனர். மூன்று வேளையும் மாத்திரைகள் எடுக்கின்றேன். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே எம்மைத் தாக்கினார். மருத்துவ அறிக்கையை வைத்தியசாலையில் வழங்குவார்கள். எமக்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று குகதாஸ் விஜயதாஸ் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like