உமா ஓயா திட்டம்! பாதிக்கப்பட்டவர்களின் நிலை?

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் அகழ்வுப் பணிகளின் போது ஏற்பட்ட நீர்க்கசிவினால் பண்டாரவளை, வெலிமடை, அலிகொட்ட ஆர, புஹுல்பொல மற்றும் அதனை அண்மித்த கிராமங்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் அகழ்வுப் பணிகளால் நீரூற்றுக்களுக்கும் மக்களின் விவசாய நிலங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதன்காரணமாக, விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்ததுடன், சில பகுதிகளில் மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கான மதிப்பீட்டு தொகையில் 800 மில்லியன் ரூபாவை சுரங்கப் பாதையை அகழும் ஈரான் மற்றும் ஜேர்மன் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்காதிருக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

அகழ்வுப் பணிகளால் சேதமடைந்த வீடுகளுக்கான நட்ட ஈட்டினை வழங்கவும் நீரேந்து பகுதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டு புதிய நீர் விநியோகத் திட்டங்களை ஆரம்பிக்கவும் இந்த நிதியை பயன்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

உமா ஓயா திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான நீர் மின் உற்பத்தியின் பின்னர் மேலதிக நீர் அலிகொட்ட ஆர நீர்த்தேக்கத்திற்கும் ஹந்தபானாகல நீர்த்தேக்கம் உள்ளிட்ட மேலம் சில நீர்த்தேக்கங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன. கிரிந்தி ஒயாவின் ஊடாக நீர் திறந்து விடப்படவுள்ளது.

ஹந்தபானகல நீர்த்தேக்கத்தில் 5000 ஏக்கர் அடிகளாக காணப்பட்ட நீர் கொள்ளளவை 15 ஆயிரம் ஏக்கர் அடிகள் வரை அதிகரிப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

உமா ஓயா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற அலிகொட்ட ஆர நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளும் பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரியதீர்வு கிடைக்குமா என தற்போது அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like