திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யமாட்டார்களா? யாழில் நீதிமன்றம் கேள்வி!!

திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய மாட்டார்களா? என மல்லாகம் நீதிமன்றம் சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் அண்மையில் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் இந்த கேள்வியை நீதிமன்று எழுப்பியிருந்தது.

“இந்த ஆசிரியர் கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார், அவர் மீது சேறு பூசும் நடவடிக்கையாகவே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது” என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “திருமணம் முடித்தவர்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்யமாட்டார்களா? திருமணம் முடிக்காதவர்கள் தான் இப்படி செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பிய மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா, சந்தேகநபரான ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ்.வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது மாணவியை வன்புணர்ந்தமை மற்றும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.