திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு!! (படங்கள்)

சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பீ வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (17) மாலை 6 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன.

எலும்புக் கூடுகளின் எச்சங்களுடன் சேர்த்தே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவடிநிலை புனித கடற்கரையோரத்தில் உள்ள இந்து மயானத்திற்கு சமீபமாக சடலங்களைப் புதைக்கும் இடத்தில் நேற்றுக் காலை முதல் இரு டிப்பர்களில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

இதை அறிந்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் து. சுஜிந்தன் உடனடியாக வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த. நடனேந்திரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இவ்விடயத்தை பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தவிசாளர் கூறினார் என, சுஜிந்தன் தெரிவித்தார்.

எனினும், குறித்த டிப்பர் வாகனங்கள் தொடர்ந்தும் மணல் அகழ்ந்து சென்றதை அவதானித்த காட்டுப்புலம் – பாண்டவெட்டை இளைஞர்கள் மாலை 6 மணி அளவில் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஒரு டிப்பரையும் ஒரு ஜே.சி.பீ வாகனத்தையும் மடக்கிப் பிடித்தனர்.

இது தொடர்பாக அறிந்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந. பொன்ராசா, செ. கிருஷ்ணராசா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இந்த விடயம், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு மீண்டும் தெரியப்படுத்தப்பட்டது. அவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சாரதிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களையும் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

இரு சாரதிகளும் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படுவர் எனவும் வாகனங்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ´வழக்கம்பரையில் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருபவரின் டிப்பர் வாகனத்திலேயே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவர்கள் இந்த இடத்தில் மணல் அகழ்ந்தனர். அப்போது நாம் அவர்களை பிடித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தோம். பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை. டிப்பரையும் சாரதிகளையும் விடுவித்தனர். இந்தத் தடவையாவது அவர்கள் உரியவாறு செயற்படுவார்களா என எமக்குச் சந்தேகமாக உள்ளது´ என வாகனங்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like