மைத்திரி-ரணிலை வீட்டிற்கு அனுப்பி பௌத்த சிங்கள ஆட்சியை நிலைநாட்டுவேன்!

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் தன்னால் பாதுகாக்கப்பட்டுவந்த பௌத்த தர்மத்திற்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

வெகு விரைவில் மக்கள் எதிர்பார்க்கின்ற புதிய அரசாங்கத்தை அடுத்த தேர்தலின் பின்னர் அமைத்துக் காட்டுவதாகவும் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

தென்னிலங்கையின் கால – அம்பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வெல்துவ ஸ்ரீ தபோதாராம விகாரைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அங்கு நடைபெற்ற சமய வழிபாட்டிலும் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்திலும் உரையாற்றினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பௌத்த மதத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்த கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விடவும் பௌத்த அரசியல்வாதிகளுக்கு அதன் பெறுமதி உணராதிருப்பது தொடர்பாக கவலையடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை அடுத்த தேர்தலை நல்லாட்சி அரசாங்கம் நடத்தும்பட்சத்தில் புதிய அரசாங்கத்தை அதன் பிறகு அமைத்துக்காட்டுவதாக சூளுரைத்தார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னரே புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியுமானால் அதுவும் சிறந்ததே என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.