வவுனியாவில் இளம் பெண்களை இலக்கு வைத்து முகநூல் மூலம் நடைபெறும் கொடூரம்!!

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்களை இலக்குவைத்தே அதிகமாக மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இனம் தெரியாத நபர் ஒருவர் பெண்களுடன் முகநூல் மூலம் நட்பாகி சட்டிங்கில் ஆரம்பித்து தான் பிரித்தானியாவில் இருப்பதாக தெரிவித்து நெருங்கிய நட்பாக மாறியதும் குறித்த பெண்ணிற்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அதனை பொதியாக்கி இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவிப்பார்.

அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதாக பல இலட்ச கணக்கில் பெருமதியான பொருட்களை சட்டிங் செய்யும் போது காண்பித்து அதனை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஓர் பொதி நிறுவனத்தின் ரசீதையும் காண்பிப்பார்.

இதன்பின் ஒரு வார காலத்தில் இலங்கை இலக்கம் ஒன்றிலிருந்து குறித்த பெண்ணிற்கு அழைப்பு ஒன்று வரும். அதில் நபர் ஒருவர் தான் இலங்கை சுங்க திணைக்கள அதிகாரி என்றும் தங்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அது பல இலட்சம் பெறுமதி ஆனது எனவே அதற்குறிய வரிப் பணமாக இரண்டு இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை குறித்த வங்கி இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு தெரிவிக்கின்றனர்.

இதனை நம்பி குறித்த பெண்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிடுகிறார்கள். அதன் பின் குறித்த முகநூல் மற்றும் தொலைபேசிகள் செயலிழக்கின்றது. இவ்வாறு பல பெண்கள் பாதிப்புக்குள்ளாகி பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் பொலிஸ் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படவில்லை.

வவுனியா கோதண்ட நொச்சிகுளம், தரணிக்குளம், குருமன்காடு பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழிலும் பல பெண்கள் குறித்த மோசடியில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே பெண்களே முகநூலில் அறிமுகமில்லாதவர்களை நட்பாக்கிக் கொள்ளும் போது அவதானமாக இருங்கள்.