யாழ்பாணத்தில் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்! வைத்தியர்கள் எச்சரிக்கை

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும்.

ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள். அவர்களிலும் 5 பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின்னர் புற்றுநோய் வைத்தியசாலையில் 4 வைத்தியர்களே கடமையாற்றவுள்ளனர். இது மோசமான நிலையாகும்.

இந்தநிலையில் வருடாந்த இடமாற்றத்திற்கு அமைவாக பருத்துறை ஆதார வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் இருந்து தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் இடமாற்றம் பெறவேண்டும்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன வைத்தியர்களை இடமாற்றியுள்ளனர். ஆனால் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து எமக்கு வரவேண்டிய வைத்தியர் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை.

பருத்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அங்கிருந்து தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெறவேண்டிய வைத்தியரை தடுப்பதே இதற்கு காரணமாகவுள்ளது.

இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஆகியோருக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ள போதும் இதுவரை நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மீண்டும் அந்த விடத்தை பணிப்பாளருடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். இதனடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாகாண சுகாதார அமைச்சு பணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோன்று பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு வெள்ளிகிழமைக்கு முனனர் எமக்கு பதில் கிடைக்க வேண்டும். இல்லையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அடையாள பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like