நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் நான் பதவி விலக தயார்; டெனிஸ்வரன்!

அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் முயற்சித்தமையாலேயே நான் முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்றேன். இப்போதும் முதலமைச்சர் எனது 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் நான் பதவி விலகத் தயாராக உள்ளேன் என்று அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வட. மாகாணசபையின் 129 ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர்கள் விடயம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சபைக்கு கொண்டுவந்த விசேட கருத்துரை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் அநீதியாகவே என்னை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் முயற்சித்தார். அதனாலேயே நான் நீதிமன்றம் சென்றேன்.

ஆகவே நான் விட்டுக் கொடுப்பதற்கு இயலாது. அதேவேளை முதலமைச்சர் தாம் செய்தது தவறு என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளவேண்டும். மேலும் முன்னாள் போராளிகளுக்கு உதவும் வகையில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த செயற்றிட்டங்களை நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து செய்யவேண்டும்.

அத்துடன் மிக நீண்டநாட்கள் மிகுந்த சிரமப்பட்டு வட. மாகாண போக்குவரத்து நேர அட்டவணை ஒன்றை தயாரித்திருந்தேன். அந்த நேர அட்டவணையும் கூட நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிடப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும்.

இந்த 3 நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தினால் நான் இப்போதும் பதவி விலகுவேன். முதலாவது நிபந்தனையை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தாவிட்டாலும் மிகுதி 2 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் கூட நான் பதவி விலகுவேன்” என்று தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like