ஆதாரங்கள் கொடுத்தும் பொலிஸார் மந்த போக்கு – வடக்கு ஆளுநரிடம் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியும் பொலிஸார் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்புக் கூட்டம் ஒன்று நேற்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோது அதிகாரிகள் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினர்.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாகத் தென்மராட்சி, கெற்பேலி, தனங்கிளப்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு நடக்கின்றது. குடியிருப்பாளர்கள் அற்ற வீடுகளில் கலாசார பிறழ்வான சம்பவங்களும், சட்டவிரோதச் செயற்பாடுகளும் நடக்கின்றன. நாவற்குழியை அண்டிய கரையோரங்களில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளது.

காரைநகர், புங்குடுதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுகின்றன. அவற்றுக்கு உடந்தையாக இருப்பதவர்கள் தொடர்பாக முறைபாடுள் செய்யப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிகாரிகள் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.

வன்முறை மற்றும் சமூக சீரழிவுகளைத் தடுப்பதற்குச் சமூகப் பிரதிநிதிகளையும், மதத் தலைவர்களையும், அதிகாரிகளையும், சட்டத் துறையைச் சேர்ந்தவர்கயும், பாதுகாப்புத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று ஆளுநர் குரே தெரிவித்தார்.

இந்து அறநெறிப் பாடசாலைகளில் அதிகளவில் தோற்றுவித்து அறநெறிகளைக் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். அதன்மூலம் தவறான பழக்க வழக்கங்களைக் குறைக்கலாம். பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்கள் தத்தமது சமய நெறிகளை அறநெறிப் பாடசாலைகள் ஊடாகப் போதிக்கும் நிலையில் இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் அவற்றைப் போதிப்பதில் வீழ்ச்சி கண்டுள்ளன என்றும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.