வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் ; சிவாஜிலிங்கம்

எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட. மாகாணசபையின் 129 ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் என்ற கோதாவில் பதிலளிக்கும் அதிகாரம் டெனீஸ்வரனுக்கும் முதலமைச்சருக்கும் மட்டுமே உண்டு. ஏனையவர்கள் தங்களை அமைச்சர்கள் என்ற அடிப்படையில் பதிலளிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிவாஜிலிங்கம், எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது.

ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை.

முன்னதாக செப்டம்பர் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன.

இங்கு குறிப்பிடும் உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர்.

நான் ஒன்றைக் கேட்கின்றேன். முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும்.

அவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவிநீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார்.

எனவே டாக்டர் சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது ? டெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார் என்றார்.