மாடு மேய்க்கச் சென்ற நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்

திருகோணமலை – இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நிலாவெளி – இலுப்பைக்குளம், 08ம் வட்டாரத்தை சேர்ந்த நபரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வடிவேல் யோகராஷா என்ற 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வீட்டிலிருந்து மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் மாலை நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை என அவரின் மனைவி விஜயலட்சுமி தேடி சென்றுள்ளார்.

வயலுக்குள் இருந்த பெக்கோவால் தோண்ணப்பட்ட கிணற்றடியில் அவரது பாதணியும், குடிப்பதற்கு வழமையாக கொண்டு செல்லும் தண்ணீர் போத்தலும் காணப்பட்டது.

இதனையடுத்து கிணற்றை பார்த்த போது குறித்த நபர் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்ததாகவும், அயலவர்களை அழைத்து கிணற்றிலிருந்தவரை மீட்டதாகவும் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லையென அவரது மனைவி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து நிலாவெளி பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமியும் விசாரணையை முன்னெடுத்தனர்.

இதில் பெறப்பட்ட வாக்கு மூலங்களில் எவ்வித மாற்று கருத்துக்களும் தெரிவிக்கப்படாததை அடுத்து உயிரிழந்த நபரின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைத்ததாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.