சூடு பிடிக்கும் வெடுக்குநாறி ஆலய விவகாரம்: வழிபடலாம்.. ஆனால், கோயிலில் கை வைக்க முடியாது….!! தடை போடும் தொல்லியல் திணைக்களம்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலயத்தில் மாற்றங்களை செய்யவோ கட்டடங்களை அமைக்கவோ முடியாதென தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. இதனை மக்கள் காலங்காலமாக வழிபட்டு வருகின்ற நிலையில், அது தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமானதென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி குறித்த ஆலயத்தை சேர்ந்தவர்களை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர். அதன்போது, ஆலயத்திற்குச் செல்லவேண்டாமென்றும் மீறிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர். எனினும், அதற்கு மறுநாள் ஆடி அமாவாசை திதி என்பதால் தொல்லியல் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் அனுமதியுடன் அங்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஆலய நிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார், ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள தடையில்லையெனக் குறிப்பிட்டனர்.ஆனால், ஆலயத்தில் மாற்றங்கள் செய்தல், கட்டடங்களை அமைத்தல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியுள்ளனர். ஆலயத்தை சூழவுள்ள காட்டுப்பகுதி தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதால், அங்கு செல்லக் கூடாதென்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர்களின் எல்லைக்கிராம பகுதியில் காணப்படும் இந்த ஆலயத்தை காலங்காலமாக தரிசித்து வந்த நிலையில், அதனை அபகரிக்க முயலக் கூடாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like