குழந்தையை சுற்றிப்பிடித்த மலைப்பாம்பு; இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம்!

நான்கு வயதுக் குழந்தை ஒன்றை மலைப் பாம்பு ஒன்று உண்பதற்காக பற்றிப் பிடித்த சம்பவம் இலங்கையின் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மொனராகலை மாவட்டம் புத்தல பிரதேசத்துக்கு அண்மித்த கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்திலுள்ள வீடொன்றில் கணவன் மனைவி மற்றும் குழந்தை என மூன்று பேர் வசித்து வந்துள்ள்ளனர்.

சம்பவ தினத்தன்று காலை வேளை கணவன் கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் மனைவியும் நான்கு வயதுக் குழந்தையும் இருந்துள்ளனர்.

முற்றத்தில் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கையில் தாய் சமையலறியில் நின்றுள்ளார். இதன்போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த குழந்தையின் தாய்,

”முற்றத்தில் எனது பிள்ளை பந்து விளையாடிக்கொண்டிருந்தது. நான் சமையலறையி சமையல் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று வீட்டின் பின்புறம் குழந்தை வீரிட்டு அழும் ஓசை கேட்டது. எமது நாயும் குரைத்துக்கொண்டிருந்தது. நாய்தான் பிள்ளையைக் கடிக்கின்றதோ என்ற பதற்றத்தில் ஓடியபோது அங்கு கண்ட காட்சி என்னை அதிர்ச்சியில் உறையவைத்தது.

ஒரு பெரிய மலைப்பாம்பு எனது பிள்ளையைச் சுற்றிக்கொண்டிருந்தது. செய்வதறியாது உதவிக்கு யாராவது வருவார்களா என்று அலறினேன். யாரும் வரவில்லை, ஏனெனில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் மற்றவர்களின் வீடுகள் இல்லை. உடனடியாக அந்த மலைப் பாம்புடன் நானும் எமது நாயும் போராடி குழந்தையை மீட்டுவிட்டோம்.

எமது நாய் அந்த மலைப் பாம்பை வாலில் கடித்து இழுத்தது. நான் ஒருவாறாக பாம்பின் தலையைப் பிடித்துபிள்ளையைச் சுற்றியதிலிருந்து மீட்டுவிட்டேன். பின்னர் அந்த மலைப் பாம்பு அருகிலிருந்த புதர் நோக்கி ஓடிவிட்டது. கொஞ்சம் தாமதித்திருந்தால் அந்த பாம்பு எமது பிள்ளையை இறுக்கிக் கொன்றிருக்கும். இரவில் யானைக்கும் பகலில் இதுபோன்ற ஆபத்துக்களுக்கும் மத்தியில் எங்கள் வாழ்க்கை கழிகின்றது” என்றார் கண் கலங்க.

இதேவேளை குறித்த பாம்பு முன்னரும் இரு தடவை வீட்டுக்கு வந்ததாகவும் தாம் தடி எடுத்து விரட்டியதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையில் வெங்கிணாந்தி எனப்படும் இந்தவகை மலைப்பாம்புகள் ஆடு, மான், முயல் எனும் உயிரினங்களைப் பிடித்து உண்டுவந்த நிலையில் தற்போது மனிதர்கள்மீதும் கண்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.